Thursday, November 17, 2011

தினமலர் புழுகுமூட்டை செய்தியும் அதற்குரிய மறுப்பும்

சிங்கப்பூரில் மரணப் படுக்கையில் தமிழ்: பாரதியார் பல்கலையில் மருத்துவம்

பதிவு செய்த நாள் : நவம்பர் 15,2011,23:22 IST

கோவை : சிங்கப்பூரில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க, அங்குள்ள ஆசிரியர்களை கோவை பாரதியார் பல்கலைக்கு அனுப்பி வைத்துள்ளது, அந்நாட்டு அரசு. தமிழில் பேசவும், கற்பிக்கவும் பல்கலையில் 20 நாள் தமிழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் ஏராளமான தமிழ் குடும்பங்கள் உள்ளன. தமிழை தாய் மொழியாக கொண்ட இவர்களுக்கு தமிழ் தெரியாது என்பதுதான் பரிதாபம்.

"தங்கள் குழந்தைகளுக்கும் இதே நிலைமை வந்து விடக் கூடாது' என்பதற்காக, அங்குள்ள 22 ஆசிரியர்கள், கோவை பாரதியார் பல்கலையில் தமிழ் கற்க வந்துள்ளனர். தமிழ் கற்றுத் தரும் பயிற்சியின் துவக்க விழா, பல்கலையில் நடந்தது. விழாவை துவக்கி வைத்த துணைவேந்தர் சுவாமிநாதன் பேசியது: நம் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் தமிழ் வாழ வேண்டும். அதற்கு தேவையான அனைத்து வகையான பயிற்சி வசதிகளையும் வழங்க பாரதியார் பல்கலை தயாராக உள்ளது.
சிங்கப்பூர், பிரிட்டன் போன்ற நாடுகளில் செட்டில் ஆகியுள்ள தமிழர்களில் பலர் புலம் பெயர்ந்தவர்கள். இவர்கள் உயர்ந்த கல்வித் தகுதிகளை வைத்திருந்தாலும், பெரும்பாலானவர்களிடம் அதற்கான சான்றிதழ் இல்லை. இதனால் மேற்படிப்புகளை தொடர ஆர்வமிருந்தும் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவர்களின் கல்வி ஆர்வம் நிறைவேற நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுடன் பேசியுள்ளேன், என்றார்.

சிங்கப்பூரை சேர்ந்த மகேஸ்வரி: நாங்கள் அனைவரும் தமிழர்கள் என்றாலும் யாராலும் வீட்டில் தமிழில் பேச முடியவில்லை. இதனால் எங்கள் குழந்தைகளுக்கும் தமிழ் தெரியவில்லை. ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். எங்கள் தலைமுறையோடு தமிழ் அழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழில் பயிற்சி அளிப்பதன் மூலம் தமிழ் அழியாமல் வாழ வைக்க விரும்புகிறோம். தற்போது சிறு நாட்டுப்புறக் கதைகள் கூறி தமிழ் ஆர்வத்தை தூண்டி வருகிறோம், என்றார்.
பாரதியார் பல்கலையின் தமிழ் துறைத் தலைவர் ரவிச்சந்திரன்: பல்கலையில் ஒரு வார பயிற்சிக்குப் பின் இங்குள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் மூலம் இங்கு தமிழ் கற்பிக்கும் முறை, பாடத் திட்டங்கள், புத்தக வடிவமைப்பு, கற்பிக்கும் முறை ஆகியவற்றைக் குறித்து இவர்களால் தெரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் உள்ள பாடப் புத்தகங்களுடன் ஒப்பிட, தங்கள் நாட்டு பாடப் புத்தகங்களை கொண்டு வந்துள்ளனர், என்றார்.இப்பயிற்சி, டிச., 3 வரை நடைபெறவுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------------
சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது!
சிங்கப்பூரில் மரணப்படுக்கையில் தமிழ் என்ற செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும். சிங்கப்பூரில் தமிழ், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரபூர்வமான அரசாங்க மொழி. ஒரு செய்தி வெளியிடும்போது அச்செய்தியை மிகைப்படுத்தி வெளியிடும் போக்கு தமிழகத்தின் செய்தியாளர்களிடம் புற்றுநோய் போலப் பரவி விரவி வருவது கவலைக்குரிய விஷயமாகும். காலப்போக்கில் பத்திரிக்கைகள் வெளியிடும் செய்திகளை யாருமே நம்ப முடியாத நிலையை உருவாக்கி எதிர்க்காலத்தில் ஊடகம் பொய்மூட்டைகளின் புகலிடம் என்ற கெட்டபெயரை ஆதாரமற்ற ‘பொய்ச்செய்திகள்’ உருவாக்கக்கூடும். சிங்கப்பூர் பற்றிய செய்திகள் உண்மைதானா என்று உறுதிப்படுத்திக்கொண்டு பிறகு அச்செய்தியைப் பிரசுரித்து இருக்கலாம்.
சீனமொழி ஆசிரியர்கள் சீனாவிற்குச் சென்று பணியிடைப்பயிற்சி பெறுவது போலவே, சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழாசிரியர்கள் தமிழகம் வருகின்றனர். இப்பயணத்தின் வழி பள்ளிகளில் மொழிப்பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்கள் கற்றல், கற்பித்தல் நடிவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது.
இது ஒரு சாதாரண வழக்கமான ஒரு நடவடிக்கையே. இதற்கு கண் காது மூக்கு வைத்துக் கற்பனை குதிரையைத் தட்டிவிட்டுப், பரபரப்பு உண்டாக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவது வழக்கமாகத் தமிழகத்தின் ஊடகங்கள் மேற்கொள்ளும் நிகழ்வாக இருப்பினும், அயல்நாட்டுச் செய்திகளை வெளியிடுவதில் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை விட மிகவும் சிறப்பான வகையில் சிங்கப்பூரில் நன்றாகவே நல்ல ஆரோக்கியமான சூழலில் தமிழ் வாழ்கிறது, வளர்கிறது.
அண்மையில் சிங்கப்பூரில், உலக அளவில் மிகப்பெரிய இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்து முடிந்திருக்கும் இன்றைய சூழலில் விஷமத்தனமாக, ஆதாரமற்ற வகையில் “சிங்கப்பூரில் தமிழின் நிலை மரணப்படுக்கை” என்ற ரீதியில் செய்தி வெளியிட்டு இருப்பதில் ஏதும் உள்நோக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இயல்பாகவே எழுகின்றது.
சிங்கப்பூரில் உலகத் தமிழாசிரியர்கள் மாநாடு 2011
அண்மையில் 9ஆம் உலகத் தமிழாசிரியர்கள் மாநாடு சிங்கப்பூரில் சீரும் சிறப்புமாக மூன்று நாட்கள் நடந்து முடிந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் இருபது நாடுகளிலிருந்து சுமார் நானூறு தமிழறிஞர்கள் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரைகள் படைத்திருக்கின்றனர்.
ஒருசில தமிழறிஞர்களின் மாநாட்டுச்செய்தியை உங்கள் பார்வைக்கு:
****************************************************************************************************************
“I learned a lot from the conference and your Tamil teachers. I wish we could bring them to USA conference and show their work. Iam glad we are going to work together and eagerly waiting for it” - DR Annamalai, USA.
“உலகத்தமிழாசிரியர் மாநாடு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. தங்களது நாடும் மக்களும் எந்த அளவிற்கு மிகவும் ஆழமாகத் தமிழை நேசிக்கிறார்கள் என்பது புலப்பட்டது” - சிவகெளரி சிவகுருநாதன், விரிவுரையாளர், இலங்கை
*******************************************************************************************************************மேலும் மாநாட்டில் படைக்கப்பட்ட கட்டுரைகள் மற்றும் செய்திகளைக் கீழ்க்கண்ட இணையப்பக்க முகவரியில் பார்க்கலாம்.
http://www.2011wttc.org.sg
சிங்கப்பூரில் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு
சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் மூன்று தினங்களாக நடைபெற்ற உலகத் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டில் உலகின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வருகை தந்தத் தமிழ் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்களால் சிங்கப்பூர் நகரம் நிறைந்திருந்தது. மகாநாட்டைச் சிங்கப்பூர் தகவல் தொடர்பு கலைத்துறை அமைச்சர் கலாநிதி யாக்கூ இப்ராஹிம் ஆரம்பித்து வைத்தார்.

சிங்கப்பூரில் காணப்படும் வளப்பமான இலக்கியத் துறைக்குச் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்கள் பெரும் பங்காற்றியிருப்பதாகவும், அதனால்தான் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அவர்களால் சிங்கப்பூரில் கூட்ட முடிந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

முதலாவது உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்து அவர் பேசினார். சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குத் தமது அமைச்சும், தேசிய கலை மன்றமும் பங்களித்து வருவதாகக் கூறிய அமைச்சர், 2006ம் ஆண்டு முதல் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் முத்தமிழ் விழாவுக்குத் தேசிய கலை மன்றம் ஆதரவளித்து வருவதாகக் கூறினார். சிங்கப்பூரின் நூலகங்களில் கிட்டத்தட்ட மூன்று இலட்சம் தமிழ் நூல்களும், ஒலி, ஒளி சாதனங்களும் இருப்பதாகத் தெரிவித்தார். தமிழை அதிகாரத்துவ மொழியாகக் கொண்டுள்ளச் சிங்கப்பூரில் முதல் உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெறுவது மிகப் பொருத்தமானது எனக் கூறினார்.

தாயகம் கடந்த தமிழ் இலக்கியம் என்ற கருப்பொருளுடன் தொடங்கிய மாநாட்டில் அனைவரையும் கவர்ந்த அம்சம் கவி பேரரசு வைரமுத்துவின் சிறப்பு பேருரை. ‘மாநாடு என்பது கூடிக் கலைகிற ஒரு கூட்டத்தின் கொண்டாட்டம் அல்ல. மாநாடு என்பது வழக்கமான விவாத மேடை அல்ல. தமிழ் இலக்கியத்தை உயர்த்திப் பிடிப்பதற்கான முடிவுகளை எடுப்பதற்கான அரங்கமாக மாநாடு இருக்கவேண்டும்’ என்று அவர் தமது பேருரையில் தெரிவித்தார்.
மாநாட்டின் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்தியா, இலங்கை, மலேசியா, ஆஸ்ரேலியா, ஐரோப்பா, கனடா, ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ் எழுத்தாளர்கள் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மகாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்தக் கவிஞர் வைரமுத்து, இலங்கையிலிருந்து வருகை தந்தப் பேராசிரியர் சந்திரசேகரன், கனடாவிலிருந்து வருகை தந்தப் பேராசிரியர் சேரன் உட்பட தமிழ் அறிஞர்கள் எழுத்தாளர்கள் பலரும் உரையாற்றினர்.
ஓரிரு நிகழ்ச்சிகள் மட்டுமல்ல, ஆண்டு முழுவதும் தமிழ் மொழி சார்ந்த பயனுள்ள பல்வேறு நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சின் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையமும் நடத்தி மாணவர்களிடம் தமிழார்வத்தை ஊட்டி, வளர்த்து வரும் செயல் குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சும் பல்வேறு போட்டிகளை நடத்தித் தமிழ்மொழியின் மீது மாணவர்களுக்கு ஈடுபாடு ஊட்டி வருகிறது. இருபத்தி நான்குமணி நேரமும் சேவையாற்றும் (ஒலி 96.8) வானொலி, வசந்தம் தொலைக்காட்சி, தமிழ்முரசு நாளிதழ் போன்ற ஊடகங்கள் தமிழ்மொழியைத் தமிழர்களிடம் குறைவில்லாமல் கொண்டு சேர்க்கின்றன.
இவ்வாறு சிங்கப்பூரில் சிறப்புடனும் முனைப்புடனும் தமிழ் வாழும் மொழியாக வளம் பெற்று வரும் சூழலில் தங்கள் செய்தி தமிழ் ஆர்வலர்களைப் புண்படுத்தியிருக்கிறது. இனிவரும் காலங்களிலாவது செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு அதன் பிறகே அச்செய்திகளை வெளியிடும் நியாயமான பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.
- அக்னிப்புத்திரன்

0 comments: